Type Here to Get Search Results !

அட்டைவிடல் சிகிச்சை

Top Post Ad

அட்டைவிடல் சிகிச்சை

அட்டைவிடல் சிகிச்சை


 

அட்டைவிடல் சிகிச்சையில் அட்டையானது பாதிக்கப் பட்ட இடத்தில் இருக்கும் கெட்ட இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலமும், அப்போது அட்டையின் வாயில் இருந்து சுரக்கும் திரவம் இரத்தத்தோடு கலப்பதன் மூலமும் சிகிச்சை நடைபெறுகிறது.

 

பாதிக்கப் பட்ட இடத்தில் உள்ள வீக்கம் வற்றுதல் அல்லது வலி குறைதல் போன்றவையே இந்த சிகிச்சை பூர்த்தியானதற்கான அடையாளமாய் கருதப் படுகிறது. இதனை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

 

துட்டரத்தம் போனாக்கால் சோக முன்கூடிய
திட்டமுடன் வேதனையும் தீருமே - வட்டதன
மானே உருவினுக்கு மற்றொன்றும் வாராது
தானே தனக்குநிகர் தான்.

பொரித்தவெள் ளரைத்துப் பூசும்
போகுமவ் விரணங் கேளாய்
கருத்துடன் மந்த வாதம
கலந்தபித் தத்தால் வந்த
வருத்தமாம் வலிபெருக்கில்
வாதமாஞ் சோபந் தீர்த்து
திருத்தமா யட்டை யுண்ணுந்
திறந்திருந் திண்ணந் தானே
.

இனி சிகிச்சை முடிந்த பின்னர் உடலில் கடித்திருக்கும் அட்டையை எடுக்கும் விதம் பற்றி பார்ப்போம். 

 

குடித்துவீ ழட்டைதனைக் கொள்தவிட்டி லிட்டுப்
பிடித்ததின்வாய் எள்ளதனைப் பெய்து பிடித்து
விட்டுரத்தம் போனால் துலைநீரில் நீந்தவிட்டுக்
கட்டுவது மண்குடுவைக் காண்.

பாதிக்கப் பட்ட உறுப்பின் வீக்கம் அல்லது அங்கு இருக்கும் வலி குறையும் வரை ஒன்றில் இருந்து இரண்டு நாளைக்கு அட்டைவிடல் சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும். இயற்கையாக ஒன்று முதல் இரண்டு நாளைக்குள் நல்ல அட்டை வேண்டிய அளவு இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடும். அதன் பின் தானாகவே விழுந்துவிடும்.

 

ஒரு வேளை நிரம்பக் குடித்த பின்னும் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்குமாயின் கடிவாயில் காடி நீரைப் பெய்தல் வேண்டும். அல்லது பொடி செய்த கறியுப்பைத் தூவ அட்டை கீழே விழுந்து விடும் என்கிறார்.

 

இரத்தம் குடித்து கீழே விழுந்த அட்டையைத் தவிட்டிலிட்டு புரட்ட வேண்டும். பிறகு பொடி செய்த எள்ளை அதன் வாயில் தேய்க்கவேண்டுமாம். அதன் பின் சுத்த நீரில் விட்டு குருதி வெளி வரும்படி செய்ய வேண்டுமாம். பின்னர் அதைப் புற்று மண் கரைத்த தெளி நீரில் விட்ட பிறகு, அந்த அட்டைகளைச் செவ்வல்லி, கொட்டி, பசு மஞ்சள் இவைகளின் கிழங்கை அரைத்துக் கலந்த நீரில் விட்டு பாதுகாக்க வேண்டும். முக்கியமாக பயன்படுத்திய அட்டைகளையும் பயன்படுத்தாத அட்டைகளையும் தனித் தனியே வைக்க வேண்டும் என்கிறார்.

 அட்டையை நீக்கிய பின்னர் கடிவாயில் இருந்து இரத்தம் பெருகினால் அல்லது புண் ஏற்பட்டால் அதைத் தடுக்கும் விதம் பற்றியும் அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

 

பொன்னிற முதிர்ந்த எள்ளைப்
பொருகுபோ லரைத்த இன்னுஞ்
சென்னிற வெண்ணெய் தன்னைச்
சிகரத்தே நொக்கக் கொண்டு
மின்னனை யாய்நீ கேளாய்
விரைந்துட நுதிரம் பாய்ந்தால்
புன்னைப்பூ நிறம தாகப்
போற்றேள் ளரைத்துப் பூசே.

சாதிரந் தன்னை கற்றுந்
தவத்தினிற் பொருளைக் கேட்டுங்
காத்திரந் துய்யனாகில் கைவந்த
தோர் கையைக் கண்டு
பார்த்திடு மிவையே யென்று
பரிவுட நிவனைப் பற்றித்
தீர்த்து நோய் தவிர்க்க வேண்டிச்
செகந்தனில் விடுவித் தாரே.


கடி வாயில் இருந்து இரத்தம் வெளியேறினால் படிகாரம் பொடி அல்லது வெங்காரப் பொடியைத் தூவ நின்று விடும். மேலும் அட்டை கடித்த இடத்தில் புண் ஏற்பட்டால் காரெள், கற்றாழை இவ்விரண்டையும் காடி நீரில் அரைத்து மேலுக்கு பூசலாம். அல்லது கற்றாழை மடலைச் சுட்டு இரண்டாகப் பிளந்து மஞ்சட் பொடியைத் தூவி புண்ணில் வைத்துக் கட்டலாம் என்கிறார்.

தகுதியில்லாத அல்லது தவறான அட்டைகளை கடிக்க விடுவதால் உண்டாகும் விளைவுகளை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.


விட்டவுருத் தானும் விழவுருவே யானக்கால்
வெட்டுருவாய் வீங்குமது வேதனையாந் திட்டஞ்
சுரமாங் கலக்கமாஞ் சூழ்தினவுங் காணும்
உரமாகும் புண்ணு முதிர்ந்து.

தவறான அட்டைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தினால் நோயாளிக்குக் காய்ச்சல் மயக்கம் வேதனை உண்டாகும். மேலும் அட்டைவிட்ட இடத்தில் எரிச்சல் நமைச்சலுண்டாகிக் கடிவாயும் வீங்கும்.


விட்டவுருத் தன்னில் விஷஉதிரந் தான் சிக்கிப்
பட்ட வுருவைப் பலகாலும் விட்டுவிடு
மத்தா லுருவடைய மான விஷமாகும்
முத்தார் தனத் தாய் மொழி.

நிரம்பக் குடித்துருவும் நித்திரை போய் மீள
வரம்பில் கடிகடிக்கி லதனைத் திரும்பப்
புளியிட்டு வாங்கும் பிடித்திருந்தால் மீளக்
கருவுற்றுத் தான் கடிக்கும் காண்.

அட்டைதனை விட்டு அதன்மீதி லே சீலை
யிட்டுறையு மல்லாக்கால் ஈயிருந்து முட்டக்
குடியாது பூசீக் குலைந்துவிடு மென்றே
துடியாரு மெல்லிடையாய் சொல்.

வீக்கம் விதனமிகு வேதனை தாங்கடினம்
தாக்குவிஷம் வேற்றுநிறந் தானணுகில் - போக்கி
விடுமட்டை தானென் றவனியிலுள் ளோர்க்குத்
திடமாக வேயிதனைச் செப்பு.


தேவைக்கு அதிகமாய் அட்டைகளை விட்டால் அதிக ரத்தம் உறிஞ்சிவிடும்.அதனால் நோயாளி நீரில்லாப் பயிர் போல வாட்டமடைந்து உயிர் துறப்பதற்கு வழியுண்டு.

 

வேண்டிய அளவு இரத்தம் வெளிப்படாவிட்டால் மீண்டும் அட்டையை விடலாம். ஆனால் நோயாளி மயக்க மடைந்தால் நிறுத்தவேண்டும். பிறகு மறுநாள் அட்டையை விடலாம். மேலும் சுடுநீர் கொண்டு ஒற்றடமிட கடிவாயினின்றும் இரத்தம் வெளிவரும்.

 

ஒரு முறை பயன்படுத்திய அட்டையை குறைந்தது ஏழு நாட்களுக்குள் திரும்ப சிகிச்சைக்கு பயன்படுத்தக் கூடாது. அதற்கு தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும், மாறாக அடுத்தடுத்து உபயோகித்தால் அது நச்சுத் தன்மையுடையதாகி விடுமாம். 

 

அதைப் போலவே அட்டையைப் பாதுகாக்கும் நீரானது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கொரு முறை மாற்றப்பட வேண்டும். அல்லாவிடில் அவ்வட்டை சோம்பலடைந்து நாளடைவிற் பயன்படாற் போய்விடும் என்கிறார்.

 

அட்டையைக் கடிக்க விட்டிருக்கும்போது அதன் மீது ஈரத்துணியை போடவேண்டுமாம். இன்றேல் மொய்க்கும். அதனால் அட்டையானது செம்மையாய்க் குடிக்காது.

 

அட்டைகள் தவறுதலாக மூக்கு, எருவாய், கருவாய் க்குள் சென்றுவிட்டால் அவ்வழிகளில் காடி நீரைப் பாய்ச்சினாலும், உப்புப் பொடியைத் தூவினாலும் அட்டை வெளி வந்து விடுமாம்.

 

அட்டைகளினால் தீரக்கூடிய சில முக்கிய நோய்களும் அந்நோய்களில் விடுவதற்குரிய இடங்களும் 

 

1. சுரத்துடன் கூடிய மார்பு அல்லரு வயிற்று நோயில், நோய் காணுமிடத்தின் மேல் விடலாம்.

2.
குருதி மூலத்தால் வருந்துகிற ஒருவனுக்குக் குருதி தடைபடுவதினால் ஏற்படும் தலைவலியை நீக்குதற்கு அட்டையை எருவாயைச் சுற்றி விடலாம்.

3.
கருப்பையில் ஏற்படும் கோளாறுகளுக்கும், சூதக வலியைத் தீர்ப்பதற்கும் தொடையின் உட்புறத்தில் அட்டையை விடலாம்.

4.
அடிபட்ட வீக்கங்கள், கட்டிகள், கிரந்தி, வீக்கங்கள் ஆகிய நோய்களுக்கு அட்டைகளை பாதிக்கப் பட்ட இடத்தில் விடலாம்.

5.
குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமல் இருந்தால் அட்டையை முதுகு நடுவின் மேல்புறத்தில் விடலாம்.

 

 

 

 


Below Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.